Friday 16 October 2015

வரலாறு..

உக்கிரன்கோட்டை
நெல்லை அருகே 1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம்: தொல்லியல் துறையினர் கண்டெடுப்பு
திருநெல்வேலியிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் 1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் மற்றும் கோட்டையை தமிழக தொல்லியல்துறையினர் அகழாய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்தி நேற்று பார்வையிட்டார். 5 இடங்களில் தலா 4 அடி ஆழம், 15 அடி நீளத்துக்கு குழிகள் தோண்டி இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பாண்டியர்களின் படைத்தளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித் தனர்.
உக்கிரபாண்டியன்
தமிழக தொல்லியல் துறை யின் காப்பாட்சியரும், இந்த திட்டத்துக்கான அகழாய்வு இயக்குநருமான ஜெ.ரஞ்சித் கூறியதாவது:
கி.பி. 768 முதல் 815-ம் ஆண்டு வரையில் மதுரையை தலைநகராக கொண்டு பராக்கிரம வீரநாராயணன் என்ற உக்கிரபாண்டியன் ஆட்சி செய்திருக்கிறார். அவரது ஆளுகைக்கு உட்பட்டு திருநெல் வேலி உள்பட தென்பகுதிகள் இருந்துள் ளன. இந்த பகுதிகளை கண் காணிக்கவும் படைகளை அனுப்பவும் படைத்தளபதிகள், படைக் கலன்கள், படைவீரர்கள் தங்கியிருக்க உக்கிரன் கோட்டை யில் படைத்தளம் இருந்திருக்கிறது.
ஆனைமலை கல்வெட்டு
ஆனைமலையிலிருந்து கிடைத்த கல்வெட்டில் `களக்குடி நாட்டு கரவந்தாபுரம்’ என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த களக்குடி உக்கிரன்கோட்டை அருகேயுள்ள பகுதியாகும். இதை அடிப்படையாக கொண்டு இந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்தபோது, பண்டையகாலத்தில் பயன்படுத்திய பல்வேறு பொருட்களும் கிடைத்தன. இதனால் இப்பகுதியில் அகழாய்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தோம். கடந்த 2 மாதமாக இந்த அகழாய்வில் எனது தலைமையில் 4 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இங்கு படைத்தளத்துடன் கோட்டை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. சுடுமண் பொம்மைகள், சங்கு கண்ணாடி பொருட்கள், தளஓடுகள், சிவன்கோயில் கட்டுமானம், நந்திசிலைகள், உடைந்த பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் செய்வதற்காக உலோகங்களை உருக்க இந்த பானைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இதனால் இங்கு ஆயுத சாலையும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த அகழாய்வு மேலும் ஒரு மாதத்துக்கு மேற்கொள்ளப்படும். அகழாய்வின் முடிவில் இங்கு கிடைத்த பொருட்களை மக்கள் பார்வையிட காட்சிப்படுத்தவுள்ளோம். பின்னர் அருகிலுள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார் அவர்.

No comments:

Post a Comment