Friday 29 May 2020

எகிப்தில் இந்திய யானைப்பாகன்

#எகிப்தில் யானைப்படையை உருவாக்கிய #இந்திய_யானைப்பாகன்.

கிமு. மூன்றாம் நூற்றாண்டு, செளூசிதியர்களுக்கும் எகிப்தினை ஆண்ட தாலமியர்களுக்கும் பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம்.

செளூசிதியர்கள் இந்தியாவோடு நல்ல நட்புறவை கொண்டிருந்தனர். எனவே தங்கள் படைபலத்தை காட்ட போர் யானைகளை இந்தியாவிடம் இருந்து வரவழைத்தனர்.

எகிப்தை ஆண்ட தாலமியர்களும் யானைப் படையை உருவாக்கப் பல வழிகளில் முயற்சி செய்து வந்துள்ளனர்.

ஆனால் இந்தியாவில் இருந்து கடல் வழியாக யானைகளை எடுத்து வர அவர்களுக்கு  இயலவில்லை. ஆகவே இந்திய யானைகளை விட பெரிய, பலம்வாய்ந்த ஆப்ரிக்க யானைகளை பிடித்து தங்கள் படையில் சேர்த்துவிடவேண்டும் என முடிவுக்கு வந்தனர்.

ஆப்ரிக்க யானைகள் மிகவும் முரட்டுத்  தனமானது. அதனை கட்டுப்படுத்துவது சுலபமல்ல. இந்திய யானைகளைப் போல அவை எளிதில் பழக்கப்படுத்தக் கூடியதும் அல்ல. முக்கியமாக போர்ப்படையில் சேர்த்து அதற்கு உத்தரவு இட்டு வேலை வாங்கும் அளவுக்கு பழக்கப்படுத்த முடியாமல்   தாலமியர்கள் திண்டாடி வந்தனர். பல நேரங்களில் பிடித்து வரப்பட்ட ஆப்ரிக்க யானைகள் வீரர்களையே கொல்ல ஆரம்பித்தன.

அப்போது எகிப்தியர்களுக்கு உதவ இந்தியாவிலிருந்து ஒரு யானைப் பாகன் முன்வந்தான். யானைகளைப் பிடிப்பதில் வல்லவனான அவனைக் கண்ட இரண்டாம் தாலமி அரசன் சந்தோஷக் கடலில் மிதந்தான்.

அவனுக்கு துணையாக ஒரு மொழிப்பெயர்ப்பாளர் உட்பட 231 பேர்கள் கொண்ட பல நாட்டவர்கள் வேட்டைக் குழு ஒன்று கிமு. 223 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

மத்திய ஆப்ரிக்கக் கண்டத்தில் இருந்து செங்கடல் வழியாக யானைகளைக் கொண்டுவர கப்பல்களை உருவாக்க சிறு சிறு துறைமுகங்களை நிறுவ ஆணையிட்டான். யானைகளைக் கொண்டுவர உருவாக்கப்பட்ட கப்பல்கள் "Elephantagoi" என அழைக்கப்பட்டன.

மிகவும் திறமையான அந்த குழு, பல  ஆப்ரிக்க யானைகளைப் பிடித்தது. அங்கேயே ஒரு பயிற்சி தளம் அமைத்து பல மாதங்கள் பழக்கியப் பின்பு கப்பலில் ஏற்றி கடல் மார்க்கமாக துறைமுகத்தை அடைந்தது. அங்கிருந்து எடிபு பெரநீஸ் என்ற பாலைவனச் சாலை வழியே இரண்டு வார நடைபயணத்தின் மூலம் நைல் நதிக்கு கொண்டுவர அந்த பாகனுக்கு உத்தரவு இடப்பட்டிருந்தது.

தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு அந்த பாகன் அந்த ஊரில் இருந்த பாண் கோவிலுக்கு சென்று தனது பயணம் வெற்றி பெற தனது பெயரையும், யானைகளின் உருவத்தையும் ப்ரியமாக வரைந்து வழிபாடு செய்துள்ளான். அந்தக் கல்வெட்டு இன்றளவும் அங்குள்ளது.

பாலைவனத்தைக் கடக்கும் போது உச்சி வெயில் நேரங்களில்  அவன் அந்த யானைகள் வழியிலிருந்த குகைகளில் அடைத்து வைக்கப்பட்டன. அந்த குகைகளிலும் அதே போன்று யானைகளின் உருவங்கள்  வரையப்பட்டுள்ளன.

இறுதியாக நைல் நதிக்கரையை அடைந்ததும், நதியின் மூலம் எகிப்தில் உள்ள அலக்ஸாண்டிர்யா நகருக்கு படகு மூலம் கொண்டு செல்லப்பட்டது.

எகிப்தியர்களின் பல நூற்றாண்டுக் கனவாக இருந்த யானைப் படையை உருவாக்கியப் பெருமை ஒரு இந்திய யானைப் பாகனையே சாரும். ஆய்வாளர்கள் அந்த யானைப்பாகன் வட இந்தியராகவோ அல்லது தென்னிந்தியராகவோ இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

அந்த யானைப் பாகனை தாலமியர்கள் “சோபோன் (Sophon)” என்று அழைத்துள்ளனர். இது சுபானு என்ற பெயரில் இருந்து தோன்றியது என அறிஞர்கள் கூறுகின்றனர்.
#ப்யாரீப்ரியன்..
~நன்றி;ஹெரிட்டேஜ்

யானையும் யானைப்பாகனும் பழகுதல்

#யானையும்_பாகனும்..
யானையை பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கரமாக அடிப்பார்கள். அதனால், யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இருக்கும். யானைக்கு கோபம் வெளிப்படும் நேரத்தில், தலைமைப்பாகன் யானை பக்கத்தில் இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான்.

ஒரு யானையை பழக்கும் போது அந்த யானையை சுற்றி நான்கைந்து கும்கியை நிறுத்துவார்கள்.  ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னால் நின்று ஆளுக்கு ஒரு குச்சியை கீழே போடுவார்கள். பக்கத்திலேயே ஒரு கும்கி நிற்கும். அது, எப்படி குச்சியை எடுத்து பாகன் கையில் கொடுக்கணும்னு திரும்ப திரும்ப செய்து காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சியை எடுத்துவிடாது. ஆனால் அது எடுக்கின்ற வரை கும்கிகள் விடாது. புது யானையை தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம்  விளக்கெண்ணையில் ஊறப் போட்ட தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே தயார் செய்த காட்டு மூங்கில் பிரம்புகளால அடிப்பார்கள். பிளிரிக்கொண்டு இரண்டு கால்களால் எழுந்து நிற்கும். ஆனால் குச்சியை எடுக்காது. எடுக்கின்ற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டார்கள். கடைசியாக அடி தாங்காமல் குச்சியை எடுத்து  எந்த பாகன் கையில் கொடுக்கிறதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடித்திருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமைபாகன். பாகன் தேர்வானவுடன் யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.

அதை பழக்க அடைத்து வைத்து தும்பிக்கையைகூட தூக்க முடியாத அளவுக்கு அடித்து... மூணு நாளைக்கு உணவு கொடுக்க மாட்டார்கள். நான்காவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசியை தூண்டி சொல் பேச்சு கேட்டால்தான்.. கரும்பு வெல்லம் கிடைக்கும் என அதற்கு உணர வைத்து, வழிக்கு கொண்டு வருவார்கள்.  அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுவது போல பயத்தை ஏற்படுத்துவார்கள்.
என்னதான் பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுவிடாது.

கடைசியாக என்றைக்கு அந்த யானை, பாகனை எந்த எதிர்ப்பும் இல்லாமல் தன் முன்னங்கால்களை மடக்கி கொடுத்து, அதன் வழியா மேலே ஏறி உட்கார அனுமதிக்கின்றதோ... அன்றைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோடு கரோலை திறப்பார்கள். பாகன் யானை மேல் உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளியே வர வேண்டும். அப்போதுதான் அது முழுவதும் பழக்கப் பட்டதற்கான அடையாளம். இதெல்லாம் நடக்க குறைந்தது 48 நாட்களாகும். கோவை மாவட்டத்தில 13 பேரை கொன்ற  'மக்னா' யானை, இன்றைக்கு முதுமலை முகாமில் மூர்த்திங்குற பேர்ல சாதுவா இருக்கு. அந்தளவுக்கு பயிற்சி..

யானைகளில் ஆறு வகை. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்போதும் வெறியுடனே இருக்கும். எந்த நேரம் ஆளை தாக்குமென அறிய இயலாது.கும்கி படத்தில் வரும் கொம்பன் யானை வகைதான் அது.

 V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்போதும் முகத்தில் ப்ரியமான ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும்,  மனிதர்களுடன் முக்கியமாக குழந்தை களுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும். இது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குதான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக்கிடைக்கா விட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.
||பாகனின்_அனுபவம்||
#ப்யாரீப்ரியன்..
புலனப்பகிர்வு.