Saturday 18 May 2019

ஐ எழுத்தின் சிறப்பு

#ஐ...

தமிழ் எழுத்துகளிலேயே தனக்கென ஒரு கம்பீரத்தை உடைய எழுத்து ”ஐ”

எழுத்தைப் பாருங்கள். ஒரு தமிழ் அரசன் தன்னைப் பணிந்த பகைவன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அழகை தன்னிடத்திலே கொண்டு விளங்கும்.

சொற்களோடு ”ஐ” சேர்த்து உச்சரிக்கும் போது, வசதியும் இனிமையும் கூடுகிறது.

”மாணிக்கக் கூத்தனை, வண்தில்லைக் கூத்தனை”-                                                   திருமூலர்.

”ஐ” என்கிற ஓரெழுத்தேகூடக் கடவுளைக் குறிக்கிறது. 
அது அகரம்-இகரம்-யகரம் என்ற மூன்றையும் சேர்ந்தது.

அகரம்-கடவுள்,பதி - இகரம்-ஆத்மா-பசு  -  யகரம்-உலகம், பாசம் என வாரியார் சுவாமிகள் விளக்குகிறார்.

தமிழகத்தின் பழைய இயற்கைப் பிரிவுகளை ”ஐந்திணை” என்றழைததனர். அவையாவன: குறிஞ்சி(மலை), முல்லை(காடு), மருதம்(வயல்), நெய்தல்(கடல்), பாலை.

”ஐ” என்றாலே தலைவன், காதலன் என்றொரு பொருள் உண்டு.

வேப்ப மரம் பூக்கும்பொழுது திரும்பிவிடுவதாகக் கூறிப் பிரிந்து சென்ற தலைவன் அவ்வாறு வரவில்லை.புதிதாகப் பூத்த வேப்பம்பூ தலைவன் இன்றி வீணாகிறதே எனத் தவைவி வருந்துகிறாள்..இங்கு தன் காதலனை ”ஐ” என்று குறிப்பிடுகிறாள்.

”கருங்கால் வேம்பின் ஒன்பூ யாணர்

என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ”

                                             (குறுந்தொகை)

ஐ என்றால அழகு என்றொரு பொருளுண்டு. அழகியது என்பதனை முன்னாளி்ல் ஐது என்பர். அழகாக மழை பெய்கிறது என்பதை ”ஐது வீழி பெயல்” எனச் சிறுபாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.

ஐ என்பதை தமிழில் மிக உயர்ந்த பெரியோர்களைம், மன்னர்களையும், சான்றோர்களையும் விளிக்க அதனுடன் யா இணைந்து ”ஐயா” என்கிற வழக்கு தமிழ் இலக்கியங்களிலும் நடைமுறையிலும் பயிலப்படுகிறது.

ஒருமுறை பாரத சொற்பொழிவாளர் ஒருவர் பேசும் பொழுது குறிப்பிட்ட செய்தியானது, ”தமிழ் மொழியில் மிக உயர்வான ஒரு சொல் ”ஐயா” என்பதாகும் என்றம், அந்தச் சொல் பயின்றுவரும் கவிதையில், அதனால் விளிக்கப்படுகிறர் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பிரியமாக போற்றப்படுவர்” என்பதாகும்.

”ஐ” என்றாலே வியப்பின் அடையாளமாகும்.

”ஐ” என்ற ஓரெழுத்து ஏராளமான அழகிய பொருட்களைத்தருவது நிச்சயமாக நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
#ப்யாரீப்ரியன்...

No comments:

Post a Comment