Tuesday 23 May 2017

கோழி முட்டையிலுள்ள குஞ்சு சுவாசிப்பது எப்படி?

கோழி எப்படி சுவாசிக்கிறது? இது என்னடா கேள்வி என்று யோசிக்கின்றீர்களா? சரி இருக்கட்டும், கோழி எப்படி சுவாசிக்கின்றது என்று எல்லோருக்குமே தெரியும், ஆனால் இதுவே கோழிக் குஞ்சு எப்படி சுவாசிக்கின்றது? இல்லை இல்லை, நான் கோழிக் குஞ்சு என்று சொல்வது எதைத் தெரியுமா? கோழி இட்ட ஒரு முட்டைக்குள் இருக்கும் குஞ்சு எப்படி சுவாசிக்கின்றது? இதைப் பற்றி எப்போதாவது சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையா? அப்படியென்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்!
முட்டைக்குள் இருக்கும் கோழிக் குஞ்சு எப்படி சுவாசிக்கின்றது என்கிற கேள்வியைப் பற்றி நீங்கள் இன்று வரை சிந்திக்கவில்லை என்றாலும், இப்போது நான் உங்களிடம் கேள்வி கேட்டதும், நீங்கள் நிச்சயமாக இந்தக் கேள்வியைப் பற்றி சிந்திப்பீர்கள், ஏனென்றால் ஒரு கோழிக்குஞ்சுக்கு முட்டையை விட்டு வெளியே வந்த பின் தான் பிராணவாயு, அதாவது oxygen தேவைப் படுவது என்று இல்லை. முட்டைக்குள் இருக்கும் போதும் அதற்குப் பிராணவாயு மிகவும் முக்கியம் தான். எனவே, முழுதாக மூடியிருக்கும் முட்டைக்குள் ஒரு கோழிக்குஞ்சு எவ்வாறு சுவாசிக்கின்றது என்பதைப் பார்ப்போம்.
ஒரு கோழிமுட்டையை எடுத்து, அதை உள்ளிருந்து பார்க்கும் போது, அதில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக இருக்கும் புறமென்றோல், உள்மென்றோல் என்று அழைக்கப்படும் இரு மெல்லிய தோல்களை அவதானிக்கலாம். பொதுவாக ஒரு கோழி முட்டை இட்டதும், ஆரம்பத்தில் அந்த முட்டை வெப்பமாக இருக்கும். ஆனால், நேரம் போகப் போக அந்த முட்டை குளிர்ச்சி அடைந்து சற்று சிறிதாகி விடும்போது, உள்ளே காணப்படும் அந்த இரு தோல்களுக்கும் இடையே பிராணவாயு சேர்கின்றது. இவ்வாறு ஏற்படும் அந்த இடத்தை வளி அறை என்று கூறுவார்கள். எனவே, முட்டைக்குள் வளரும் கோழிக்குஞ்சு அந்த வளி அறையில் சேர்ந்திருக்கும் பிராணவாயுவை சுவாசிக்கின்றது. இப்படி சுவாசிக்கும் கோழிக்குஞ்சு உடனடியாக கரியமிலவாயுவைத் (carbon dioxide) தானே வெளியிடும். இப்படி வெளியிடப்படும் இந்த நச்சு வாயு எங்கே போகும்? இது வெளியே போகாமல் விட்டால், இதை சுவாசித்து அந்தக் கோழிக் குஞ்சு இறந்துவிடுமே, இறைவனால்படைக்கப்படும் அனைத்துமே அதிசயம் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் என்பது இதில் தெரிந்துவிடும். பிராணவாயு வருவதற்கு ஒரு வழி இருக்கின்றது என்றால், கரியமிலவாயு வெளியே செல்வதற்கும் ஒரு வழி இருக்கத் தானே வேண்டும். நிச்சயமாக! அந்த கோழிக்குஞ்சு வெளியேற்றிய அந்தக் கரியமிலவாயு, முட்டைக் கோதில் காணப்படும் சுமார் 7000 நுண்துளைகள் ஊடாக வெளியே செல்கிறது. அதே நுண் துளைகள் ஊடாக மறுபடியும் புதிய பிராணவாயு உள்வருகின்றது. இப்படியே அந்தக் கோழிக்குஞ்சு ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுவாசித்து வளர்ந்து வரும். என்ன நண்பர்களே, இதை விட ஆச்சரியம் இருக்க முடியுமா? ..#ப்யாரீப்ரியன்


No comments:

Post a Comment