Monday, 15 September 2014

அறிவியலுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று, உள்நோக்கி மெய்ப்பொருள் தேடும் அக நுட்பம். இன்னொன்று, வெளியே செய்பொருள் காணும் தொழில்நுட்பம். முன்னது விழிப்புணர்வு. மனிதனின் அக ஆளுமையை வளர்க்கும் பகுத்தறிவு. பின்னது வாழ்வின் புற வசதிகளைப் பெருக்கும் பகுப்பாய்வு. இரண்டுமே இன்று நம் தேவை. இன்றைக்குச் சரியாக 51ஆண்டுகளுக்கு முன்னால், 1963-ம் ஆண்டு (நவம்பர் 21) "நைக்கி அப்பாச்சி' என்ற முதலாவது ராக்கெட் இந்திய மண்ணில் இருந்து மிக அடக்கத்துடன் விண்ணில் உயர்ந்தது. திருவனந்தபுரம் அருகே தும்பா கடற்கரை அந்தப் பெருமை பெற்றது. இயற்கையில் புவிகாந்த நடுக்கோட்டில் அமைந்துவிட்ட ஒரு மீன்பிடி கிராமம். அங்கு ராக்கெட் நிலையம் வந்தாலும் உச்சிமீது வானிடிந்து வீழ்ந்து விடாது என்று மக்கள் அச்சத்தைப் போக்கினோம். தும்பா நிலநடுக்கோட்டு ராக்கெட் ஏவுதளம் உருவாயிற்று. எத்தனையோ சோதனைகள், சாதனைகளின் ஆரம்பகாலச் சாட்சியம் கூறும் தும்பா ஏவுதளத்தில் இந்தியாவிலேயே முதலாவது பெரிய திட உந்து எரிபொருள் தயாரிப்பு நிலையம் எழுப்பப்பட்டது. ஹோமி ஜே.பாபா, விக்கிரம் சாராபாய், சிட்னிஸ், அப்துல் கலாம் போன்றவர்களால் ராக்கெட் ஏவுதளமாகத் தேர்வு செய்யப்பட்டபோது, அந்தப் பகுதியில் இருந்த மரிய மக்தலேனா தேவாலயமும், பிஷப் பெரெய்ரா வாழ்ந்த ஓட்டு வீடும் இன்று வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டன. இந்திய விண்வெளி அருங்காட்சியகமும், மக்கள் தொடர்பு அலுவலகமும் ஆக அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நம் முதலாவது "ரோகிணி - 75' வானிலை ஆய்வூர்தி 1967 அக்டோபர் 25 அன்று வெறும் 2.5 கிலோ கிராம் எரிபொருளால் 7 கிலோமீட்டர் உயரம் வரை பறந்தது. இன்று உலகிலேயே மிகக் கனமான திட எரிபொருள் ஏவூர்திகள் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், உக்ரைன், எகிப்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, சுவீடன், பல்கேரியா, பிரான்சு, பிரேசில், நார்வே, நெதர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி ஆகிய மேலை நாடுகள் அகர வரிசையில் தத்தம் செயற்கைக்கோள் பொட்டலங்களுடன் சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிக்கோட்டா வெயிலில் காத்து நிற்கின்றன. ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், அந்நாளில் தமிழகத்தில் திருநெல்வேலி கடலோரம்தான் செயற்கைக்கோள் ஏவுதளத்துக்கான இடம் முதலில் பரிந்துரைக்கப்பட்டது என்பதே உண்மை. "வானவூர்தி ஏறினள் மாதோ' என்று கண்ணகியைத் தெய்வமாக வழிபடுகிறோம். வானவூர்தியை எனது முப்பாட்டன் கண்டுபிடித்தான் என்றெல்லாம் இன்று சின்னத்திரையில் முழங்குகிறோம். இந்தப் பிரசாரத்துக்கு உறுதுணை செய்யும் செயற்கைக்கோள்கள் செலுத்தும் ஏவுதளத்தை ஸ்ரீஹரிக்கோட்டாவுக்குத் தள்ளி விட்டோம். அறிவியலில் மட்டுமா, திராவிடக் கலாசாரம் பற்றி சுயநலத்துக்காக மட்டும் வாய்கிழியப் பேசுகிறோம். பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனத்தைப் பணக்கார சாமி பள்ளி கொள்ளும் திருவனந்தபுரத்துக்குப் பயணச்சீட்டு கொடுத்து வழி அனுப்பினோம். திராவிடப் பல்கலைக் கழகத்தையோ கொஞ்சமும் தீண்டாமல் ஏழுமலையானின் ஆந்திரக் குப்பத்துக்கு வண்டி ஏற்றிவிட்டோம். அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என்று பிறர்க்குத்தான் பாடம் நடத்துகிறோம்


No comments:

Post a Comment