Friday, 24 April 2020

வீர எல்லாளன் நாணயம்

அநுராதபுர இராசதானி காலத்தில் எல்லாள மன்னன் வெளியிட்ட தமிழ் நாணயம்

இலங்கையின் பூர்வீக மக்கள், அவர்களது பண்பாடு தொடர்பாக கூறப்பட்டு வந்த  நீண்ட பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகள் சமீபகாலத் தொல்லியல் ஆய்வுகளால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு  வருவதைக் காணலாம். விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் நாகரிகயுகம் தோன்றிவிட்டதாகக்  கூறும் இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் சேனகபண்டாரநாயக இலங்கை மக்களின் வரலாற்றையும்இ பண்பாட்டையும் விஜயன் வருகைக்கு முந்திய பண்பாடுகளில் இருந்து ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றார். இதற்கு விஜயன் தலைமையில் வடஇந்தியக் குடியேற்றம் நடந்தாகக் கூறப்படும் கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இலங்கையில்  நாடோடிகளாக வாழ்ந்த கற்காலப் பண்பாட்டு மக்களும், நாகரிக உருவாக்கத்திற்கு காரணமான பெருங்கற்கால மக்களும் வாழ்ந்து வந்ததை நம்பகரமான தொல்லியற் சான்றுகள் உறுதிப்படுத்தி உள்ளதே காரணமாகும்.
இந்நிலையில் இலங்கையில் புழக்கத்தில் இருந்த தொன்மையான மொழிகளை அடையாளப்படுத்தும் முக்கிய சான்றான எழுத்தின்  தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்ந்த பேராசிரியர்  சத்தமங்கல கருணாரட்னா (1962), பெர்ணாந்தோ (1969), ஆரியஅபயசிங்க (1975) போன்ற அறிஞர்கள்   வடஇந்தியாவிருந்து பௌத்த மதத்துடன் வடஇந்தியப் பிராமி என்ற எழுத்து வடிவம் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்னரே  தமிழ் மொழிக்குரிய தமிழ்ப் பிராமி என்ற எழுத்து வடிவம்  புழக்கத்தில் இருந்ததாகக் கூறுகின்றனர். ;. இத்தமிழ்ப் பிராமி எழுத்தின்  பயன்பாடு இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு  முன்பிருந்தே இலங்கையில் பயன்பாட்டிலிருந்து வந்ததைப் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டச் சாசனங்கள் உறுதிசெய்கின்றன. இவ்வாதாரங்கள் இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றை மட்டுமன்றி அவர்களிடையே தோன்றியிருக்கக் கூடிய அரச மரபு பற்றிய பாரம்பரிய நம்பிக்கைகளையும் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதைக் கோடிட்டுக்காட்டுகின்றன.  இதற்கு இலங்கையில் புழக்கத்தில் இருந்த தொன்மையான தமிழ் நாணயங்களை முக்கிய சான்றாகக் காட்டலாம்.

நாணயங்கள் இலக்கியங்கள், கல்வெட்டுக்களைப் போல்  விரிவான வரலாற்றுத் தகவல்களைத் தரக்கூடியவை அல்ல  .ஆயினும் ஆட்சில் இருந்த ஒரு அரச வம்சத்தால் அல்லது ஒரு மன்னனால்  வெளியிடப்படும் நாணயங்கள் அவர்களின் சமகாலத்திற்குரியதால்  அவை நம்பகரமான சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றது. இதற்குப் பண்டைய இந்திய இலக்கியங்களில், கல்வெட்டுக்களில் சொல்லப்படாத சில அரச வம்சங்களைஇ  மன்னர்களை, மற்றும்  சிற்றரசர்களை நாணயங்களால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தநோக்கில் இலங்கையில் புழக்கத்தில் இருந்த பண்டைய தமிழ் நாணயங்கள் இதுவரை ஆராய்ந்து பார்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.

எல்லாளன் வெளியிட்ட நாணயம்?

.வரலாற்றுத் தொடக்ககாலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தமிழகத்தில் சங்ககால மூவேந்தர் வெளியிட்ட சதுரவடிவ நாணய மரபை ஒத்ததாகக் காணப்படுகின்றது. சதுரவடிவில் நாணயங்களை வெளியிடும் மரபு சங்ககாலத்திற்குரிய தனிச் சிறப்பம்சமாகக் கூறப்படுகின்றது. இதனால் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட சதுர வடிவிலமைந்த நாணயங்கள் தமிழக மரபைப் பின்பற்றி வெளியிடப்பட்டவை எனக் கூறலாம். இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இந்நாணயத்தின் முன்பக்கத்தில் கோட்டுருவில் அமைந்த சதுரமான பெட்டிக்குள் நிற்கும் நிலையி;ல் காளை உருவமும், அதன் தலைப்பகுதிக்கு கீழே பலிபீடம் போன்ற உருவமும் காணப்படுகின்றது. நாணயத்தின் பின்பக்கத்தில் சதுரமான கோட்டுக்குள் வட்டமும், அவ்வட்டத்திற்குள் சிலவற்றில் மூன்றும், வேறுசில நாணயங்களில் நான்கு புள்ளிகளும் காணப்படுகின்றன. இந்நாணயங்கள் பற்றி ஆராந்த அறிஞர்கள்  பலரும் நாணயத்தின் வடிவமைப்பு சமகாலத்தில் சங்ககால  மூவேந்தர்கள் வெளியிட்ட நாணய வடிவமைப்பை ஒத்திருப்பதால் இவை தமிழகத்துடன் கொண்டிருந்த அரசியல், வாணிபத்  தொடர்பால் இலங்கைக்கு வந்ததாகக் கூறுகின்றனர். அவ்வாறு கூறியமைக்கு யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முன்னர் இலங்கைத் தமிழரிடையே அரச உருவாக்கம் தோன்றவில்லை என்ற நம்பிக்கையும் முக்கிய காரணமாகும்.
ஆயினும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சம் தமிழகத்தில்  சங்ககால மூவேந்தர் வெளியிட்ட நாணயங்களின் பின்பக்கத்தில் பாண்டியருக்கு மீனும், சோழருக்குப் புலியும், சேரருக்கு அம்பும் வில்லும், அதியமான் போன்ற குறுநில அரசுக்கு ஆற்றுச் சின்னமும் அரச இலட்சனைகளாகப்  பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த சதுர நாணயங்களின் பின்பக்கத்தில் இச்சின்னங்களைக் காணமுடியவில்லை. மாறாக நாணயத்தின் பின்பக்கத்தில் சதுரமான கோட்டுக்குள் வட்டமும், அவ்வட்டத்திற்குள் நான்கும் சில நாணயங்களில் மூன்று புள்ளிகளும் காணப்படுகின்றன. தமிழகத்தில் சங்க காலம் தொட்டு வெளியிடப்பட்ட நாணயங்கள் சமகாலத்தில் இலங்கையில் உபயோகத்தில் இருந்ததற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட மேற்குறித்த நாணயம் ஒன்றுதானும் தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மையில் இந்நாணயம் சங்ககால மன்னர்களால் வெளியிடப்பட்டிருந்தால் இலங்கையைக் காட்டிலும் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் கிடைத்திருக்க வேண்டும். இந்நாணயத்தில் காணக்கூடிய இன்னொரு அம்சம் பிற்பட்டகாலத்தில் அநுராதபுர ஆட்சியாளராக இருந்த சில சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் முன்பக்கத்தில் சிங்கமும், இந்நாணயத்தின் பின்பக்கத்தில் காளை உருவம் பொறித்த நாணயத்தின் பின்பக்கத்தில் காணப்படுவதை ஒத்த  சின்னங்களும்  பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து அநுராதபுரத்தில் ஆட்சி செய்த  தமிழ் மன்னர்கள்  காளை உருவத்தையும்,  சிங்கள மன்னர் சிங்க உருவத்தையும்  தமது குலச் சின்னமாக அல்லது அரச சின்னமாக பயன்படுத்தியுள்ளனர் எனக் கூறலாம். நாணயங்களின் பின்பக்கத்தில் இரு மன்னர்களும் ஒரேவகையான சின்னங்களைப் பயன்படுத்தியமைக்கு இவை அநுராதபுர அரசை அல்லது நாட்டைக் குறிப்பதற்காக இருக்கலாம். .
சிங்கள மன்னர்கள் சிங்கத்தை தமது குலமரபாகவும்இ அரச சின்னமாகவும் கருதும் மரபு விஜயன் வருகை பற்றிய கதையுடன் இணைந்த ஒன்று. இச்சின்னத்தைப் பிற்கால சிங்கள மன்னர்களும் நாணயங்களில் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் காளையை அரச சின்னமாகவோ, புனித சின்னமாகவோ பயன்படுத்தியமைக்கு  ஆதாரங்கள் காணப்படவில்லை. மாறாக அச்சின்னத்தை பௌத்த சிங்களப் பண்பாட்டில் ஒரு கலைவடிவாகவே பயன்படுத்தியுள்ளனர். இதற்கு உதாரணமாக பௌத்த ஆலயங்களில் வாசல் பகுதியில் காணப்படும் சந்திரவட்டக்கல்லில் மலர்கள், பறவைகள், மிகங்கள் முதலான சின்னங்களுடன் காளையும் ஒரு சின்னமாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம.; ஆனால்  தமிழர் பண்பாட்டில் காளைப் புனிதச் சின்னமாகக் கருதும் மரபு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இதற்கு யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் காளை (நந்தி) ஒரு புனித சின்னமாகவும், அரச இலட்சனையாகவும் பயன்படுத்தி  உள்ளதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்நிலையில் அநுராதபுர அரசில் ஆட்சிபுரிந்த தமிழ்கள் வெளியிட்ட நாணயங்களில் காளை உருவம் பொறிக்கப்பட்டிருப்பது யாழ்ப்பாண இராசதானிக்கு முன்னரே அம்மரபு இலங்கையில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களால் பயன்படுத்தி வந்துள்ளதைக் கோடிட்டுக்காட்டுவதாக உள்ளது.
அநுராதபுர இராசதானியில் முதல் 200 ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த பத்து தமிழ் மன்னர்கள் எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களுள் எல்லாள மன்னன் 44 ஆண்டுகள் (கி.மு 161---105) நீதி தவறாது ஆட்சி புரிந்தவன் எனப் பாளி இலக்கியங்கள் கூறுகின்றன. இவனே இலங்கையில் நீண்ட காலம் ஆட்சிபுரிந்த முதல் மன்னனாவான். ஆயினும் .தேரவாத பௌத்த மதத்தை முதன்மைப்படுத்திக் கூறும் பாளி இலக்கியங்கள் அம்மதத்திற்குப் பணி செய்த மன்னர்களின் வரலாற்றையே முதன்மைப்படுத்திக் கூறுகின்றன. உதாரணமாக 26 ஆண்டுகள் மட்டும் ஆட்சி செய்த துட்டகாமினி மன்னனின் வரலாற்றை 821 செய்யுளில் கூறும் மகாவம்வம் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த  எல்லாள மன்னனின் வரலாற்றை வெறும் 21 செய்யுளில் மட்டுமே கூறுகின்றது. இதனால் பாளி இலக்கியங்களில் இருந்து எல்லாளனின் வரலாற்றையும், அவனது வரலாற்றுப் பணிகளையும் குறைந்தளவுதானும் அறியமுடியவில்லை. ஆயினும் அவனது நீண்டகால ஆட்சிக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைத்தமைக்கு அவன் மக்களுக்கு ஆற்றியபணிகளே காரணமாக இருந்துள்ளது எனக் கூறலாம். இதனால்தான்   எல்லாளனை வெற்றி கொண்ட துட்டகாமினி அவன் இறந்த இடத்தில் சமாதி எழுப்பி அச்சமாதியை  மக்கள்  வழிபடவேண்டும் என ஆணை பிறப்பிக்க காரணமாகும்.
அண்மையில் தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமியில் எழுதப்பட்ட சில நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு நாணயத்தில் திஸபுரம் என்ற இடத்தில் ஆட்சி செய்த சடநாகராசன் என்ற வாசகம் காணப்படுகின்றது. இவற்றில் இருந்து தென்னிலங்கையில் தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி இருந்தமையும், அவர்கள் நாணயங்கள் வெளியிட்டமையும்.  தெரியவந்துள்ளன. மகாவம்சத்தில் கூட எல்லாளன் ஆட்சிக்கு சார்பாக தென்னிலங்கையில் 32 தமிழச் சிற்றரசர்களின் ஆட்சி இருந்தது பற்றிக் கூறுகின்றது. தென்னிலங்கையில்  சிற்றரசர்களாக இருந்த சிலரே பின்னர் அநுராதபுர மன்னர்களாக ஆட்சியைக் கைப்பற்றியதற்கு மகாவம்சத்தில் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இங்கே எல்லாள மன்னன் அநூராதபுரத்தில் ஆட்சியிலிருந்த காலமும் காளை உருவம் பொறித்த நாணயம் பயன்பாட்டிலிருந்த காலமும்  ஏறத்தாழ ஒரே காலமாகக் காணப்படுகின்றது. இதனால் இந்நாணயத்தை எல்லாள மன்னன் அநுராதபுர மன்னனாக இருந்து வெளியிட்ட நாணயமாகக் கொள்வதே பொருத்தமாகும்.

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

1 comment:

  1. luckyclub.live - luckyclub.live
    Luckyclub.live 【6718239.com】 ,best luckyclub slot machines online for real money casino,play today lucky casino online,betfair slots,sports betting,casino

    ReplyDelete