Tuesday, 15 October 2019

உறைகிணறு

#உறைகிணறு.. காவிரிப்பூம்பட்டினத்தில் வானகிரி, நெய்தவாசல், பெருந்தோட்டம் முதலிய பகுதிகளில் உறைகிணறுகள் காணப்படுகின்றன.
கடற்கரை அருகில் உறை கிணறுகள்.உறை கிணற்றுப் புறச்சேரி' என்ற ஒரு பகுதி குறித்தும்  நல்ல தண்ணீருள்ள கிணறு பற்றியும் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் பல இடங்களில் சகொற்கை, அரிக்கமேடு, மாமல்லபுரம், வசவசமுத்திரம் (மாமல்லபுரம் அருகில்), மாளிகைமேடு, செங்கமேடு, மாங்குடி(நெல்லை), காஞ்சிபுரம், படைவீடு, பெரியபட்டினம் முதலிய இடங்களிலும் அண்மையில் #கீழடி (சிவகங்கை) பட்டரைப் பெரும்புதூர் (திருவள்ளூர்) போன்ற இடங்களிலும் #உறைகிணறுகள வெளிப்படுத்தப்பட்டன.

இவை இரண்டு வகையாக இருக்கும். ஒரே உயரம் அளவு உடையதாக வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். வளையங்களுக்கு இடையில் களிமண்பூச்சு இருக்கும். சில இடங்களில் வளையத்தின் நடுவே சிறு துவாரம் இருக்கும். இதன் வழியே பக்கவாட்டு நிலத்தில் உள்ள நீர் கிணற்றுக்குச் சென்றுவிடும்.

மற்றொரு வகையில் உறை கிணற்றின் மேற்பகுதியின் விட்ட அளவு, கீழ்பகுதியை விடக் குறைவாக இருக்கும். அதனால், ஒரு வளையத்தின் மேல் இன்னொரு வளையம் வைக்கும்பொழுது மேலே வைக்கப்படும் வளையத்தின் கீழ்ப்புற விட்ட அளவு அதிகமாக இருப்பதால் அது கீழே உள்ள வளையத்தில் நன்றாகச் செருகிக் கொள்ளும்.

பொதுவாக மனிதன் வாழ்ந்த #பண்டையவாழ்விடங்களில்' இத்தகைய உறைகிணறுகள் காணப்படுகின்றன.

தமிழகத்தில் கிணறுகள் தோண்டப்பட்டதையும், அவற்றிலிருந்து நீர் எடுத்தலைப் பற்றியும் சங்க இலக்கியங்களான அகநானூறும்  பெரும்பாணாற்றுப்படையும்  குறிப்பிடுகின்றன.
#ப்யாரீப்ரியன்

No comments:

Post a Comment