Monday, 27 June 2016

திட்டி வாசல்

திட்டி வாசல்''!!!
பெருங்கோயில்களிலும் அரண்மனையைச் சூழ்ந்த கோட்டையிலும் பெரிய வளமனைகளிலும் முகப்பில் உயர்ந்த பெரிய வாயில்கள் இருக்கும்.
அயோத்தியின் நான்கு பக்கங்களிலும் திசையானைகளைப் போல் நான்கு வாயில்கள் இருந்தன என்றும், அவை முன்னர், திருமால் விரைந்து விண்ணையளந்த திருவடியைவிட உயர்ந்திருந்தன என்றும் கூறுகிறார் கம்பர்.
அவற்றின் கதவுகள் இரும்பினாலோ, உறுதியான மரத்தினாலோ அமைந்திருக்கும். அவற்றை அடிக்கடி திறப்பது தொல்லையாக அமையும். அதனால் அக்கதவுகளுக்குப் பக்கத்திலோ, அக்கதவுகளினிடையிலோ கதவுகளோடு கூடிய ஒரு சிறுவழியை அமைத்திருப்பார்கள்.
பெரிய கதவுகள் மூடியிருந்தாலும் அச்சிறிய வழியைக்கொண்டு எளிதில் உள்ளே செல்லவும் வெளியே வரவும் இயலும்.
அஃது ஓர் ஆள் செல்லக்கூடிய அளவில்தான் அமைந்திருக்கும். அதனால், காவலர்கள் நுழைபவரைக் உன்னிப்பாகக் கவனிப்பதற்கும் வாய்ப்பு அமையும். அத்தகைய கதவுகளோடு கூடிய சின்ன வழியினைத்தான் ''திட்டி வாசல்'' என்று குறிக்கின்றனர்.
ஆங்கிலத்தில் ''Wicket Gate'' என்று குறிக்கின்றனர்.
கோட்டைச் சுவர்களில் பகைவர்கள் முற்றுகையிட்டிருக்கும்போது தப்பிச் செல்வதற்காக ஒருசில இடங்களில் சிறுபாதை அமைத்திருப்பார்கள். அதனைப் "புழை' என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. அது வேறு; இந்தச் சிறுவழி வேறு. அது மறைவான வழி; சிலரே அறிந்தது. இது வெளிப்படையாக அமைந்த வழி; பலரும் அடிக்கடி பயன்படுத்தும் வழி. இது பெரிய வாயிலுக்கு அருகிலேயோ உள்ளேயோ அமைந்த துணைவாயில் ஆகும்.
'

No comments:

Post a Comment