ஓர் ஆளுயரம் எனச் சொல்லப்படும் கோல் = 2 சிறுகோல் = 5 1/2 அடி. ஒரு சாத்தாரத் தமிழரின் செந்தர உயரம் என்று இதைத்தான் அந்தக் காலத்தில் கொண்டார்கள் போலும். ஓராள் உயரத்தைச் செங்கோல், தண்டு என்று சொல்லுவது ஓரோவழி வழக்காகும். குறளில் கோல் என்னும் சொல்லாட்சி செங்கோன்மை, கொடுங்கோன்மை என்ற அதிகாரங்களில் ”மன்னவன் கோல்” என்று ஆளப்படுகிறது.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி
இங்கே மன்னவனின் கோல் 2.75 அடியாக இருக்க வழியில்லை. 11 அடியாகவும் இருக்க முடியாது. இது பெரும்பாலும் ஓராளுயரமாய் 5 1/2 அடி இருக்கவே வாய்ப்புண்டு. ஆங்கிலத்தில் fathom என்ற அளவு ஒரு காலத்தில் 5 1/2 அடியைக் குறித்திருக்கிறது. பின்னால் அது 6 அடியையும் குறித்தது. இந்த வழக்கும் வடவர் வழக்கும் ஒன்றுபடுகிறது. அர்த்த சாற்றத்தில் இந்த வழக்கே இருக்கிறது. “தனு இரண்டதுவோர் தண்டம்” என்ற கந்தபுராணம் அண்டகோ.6 ஆம் கூற்று 5 1/2 அடி வழக்கைப் பின்பற்றியது. [தனு - வில் - என்ற சொல் 5 1/2 அடி நீளத்தையும் குறித்து, 2 3/4 அடி நீளத்தையும் குறித்திருப்பது வெவ்வேறு வட்டார வழக்குப் போலும்.]
முருகனைத் தண்டபாணி என்று சொல்லும்போது, அவன் கையில் வைத்திருக்கும் தண்டு 5 1/2 அடி உயரம் கொண்டதாகவே இருக்கலாம். முருகன் கை வேலும், தமிழர் வேலும் கூட 5
1/2 அடி உயரமே இருத்தல் இயலும். [ஐயனார் கோயில்களில் நேர்ந்து கொண்ட அல்லது நேர்ந்து கொள்ளும் வேல்களை அளந்து பார்க்க வேண்டும்.] இந்தக் காலத்தில் சவளம் எறிவது பற்றியும் ஈட்டி 8 முழம் என்பதில் மிக்குயர்ந்த உயரம் பற்றியும் சென்ற பகுதியிற் பேசினோம்.
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். 567
என்ற குறளில் வரும் ”கையிகந்த தண்டம் - கையில் இருந்து வெளிப்பட்ட தண்டம்” கூட 5 1/2 அடி அளவினதாக இருக்கவே வாய்ப்பு உண்டு. 11 அடித் தண்டமாய் இருக்க வழியில்லை. இதே போல தண்டச்சக்கரம் என்ற சொல்லால் குயவனது திருகையும், கோலும் உணர்த்தப் படும் போது, அந்தக் கோலும் 5 1/2 அடி தான் இருக்கமுடியும். தண்டஞ் செய்து வணங்குதல், தண்டனிட்டல் ஆகியவற்றிலும் ஓராள் உயரமே சொல்லப் பட முடியும். ஓர் உலக்கை என்பதும் கூட ஆளுயரம் உள்ள கோலையே குறிக்கிறது. மொத்தத்தில் தண்டத்தைக் குறிக்க இருவேறு பட்ட வழக்கு (5 1/2 அடி, 11 அடி) நம்மிடையே இருந்து பின்னால் 5 1/2 அடித் தண்டமே வடவர் பால் பரவியது போலும். எனவே நாம் பழைய ஆவணங்களில் கோல், தண்டம் என்ற சொற்களை ஆளும் இடங்களில் கூர்ந்து பார்த்து வேறுபாடு தெரிந்து பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
--ப்யாரீ ப்ரியன்..
No comments:
Post a Comment