“தமிழர் உருவாக்கிய இரும்புக் காலம் (Iron Age)“
நன்றி - ராஜ்சிவா
'இரும்பு' உலோகத்தை, 'Iron' என்று ஆங்கிலத்தில் அழைத்தாலும், அறிவியலில் ‘Fe’ என்றே அது அறியப்படுகிறது. இலத்தீன் மொழியில் ‘Ferrum’ என்பார்கள். அதனடிப்படையில், ‘Fe’ என்னும் ஈரெழுத்துக் குறியீடு, இரும்புக்கு உரியதானது. புவியில் கிடைக்கப்பெறும் தனிமங்களை, எழுத்துகளால் அடையாளப்படுத்தும் முறையை ‘ஜோன் டால்டன்’ (John Dalton) என்னும் வேதியலாளர் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதை மறுசீரமைத்து, ஒற்றை, இரட்டை எழுத்துகளில் குறிப்பிட்டவர், ‘ஜோன்ஸ் ஜேக்கப் பெர்சீலியஸ்’ (Jöns Jacop Berzelius). இவரே இலத்தீன், கிரேக்க மொழிகளின் சொற்களிலிருந்து தனிமங்களுக்குப் பெயரிட்டார். இலத்தீனில் இரும்பு, ‘Ferrum’ (Fe ) என்பதுபோலத் தங்கம், ‘Aurum’ (Au). வெள்ளி, ‘Argentum’ (Ag). செப்பு, ‘Cuprum’ (Cu). இந்தப் பெயரிடுதல்கள் 18ஆம் நூற்றாண்டுகளில் நடந்தவை.
இரும்பு, 3500 ஆண்டுகளுக்கு முன்னரே புழக்கத்திற்கு வந்துவிட்டது. இன்றையத் துருக்கியான, அன்றைய ‘ஹிட்டைட் பேரரசில்’ (The Hittiite Dynasty), கி.மு.1400 முதல் கு.மு.1200 வரையான காலங்களில், இரும்பு முதன்முதலாக அறிமுகமாகியது என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. அதன் பின்னர், கி.மு.1000 ஆண்டளவில் இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு இரும்பின் பயன்பாடு பரவியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பனிக்காலம் (Ice Age), கற்காலம் (Stone Age) கடந்து, கி.மு.1200 களில், ஆதிமனிதனின் இரும்புக்காலம் (Iron Age) ஆரம்பமாகியது என்று, மனித வரலாற்றின் வளர்ச்சிப் படிகளைக் கணித்திருக்கிறார்கள். அதுவே உண்மையென்றும் உலகம் நம்பிவந்தது. ஆனால், “இவை எல்லாமே தப்பு” என்று சத்தமான குரல் எழுந்திருக்கிறது. குரல் எழுந்த இடம், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர்.
முவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், யாராலோ முதன்முதலாகப் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட இரும்பை, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
“ஒரு தனிமத்தைக் கண்டுபிடிப்பதில் பெருமைகொள்வதற்கு அதில் என்ன சிறப்பு இருக்கிறது? அதற்கு ஏன் இந்தளவு உணர்ச்சிவசப்பட வேண்டும்?” இது எத்துனை முக்கியமானது, சிறப்பானது என்பதை அறிவியலே நமக்கு உணர்த்துகிறது.
ஏனைய உலோகங்கள்போல், மனிதனால் இரும்பைச் சுலபமாகக் கண்டுபிடித்திருக்க முடியாது. அத்துடன் தமிமனிதனாலும் அது சாத்தியமில்லை. ஒரு சமுதாயத்தின் ஒன்றுசேர்ந்த உழைப்பின் மூலம்தான் இரும்பைக் கண்டுபிடித்திருக்க முடியும். அதற்கு, அறிவியல் வளர்ச்சியையும் அச்சமூகம் பெற்றிருக்க வேண்டும்.
தங்கமோ, வெள்ளியோ, துத்தநாகமோ, காரீயமோ, வேறு எந்த உலோகமானாலும், இயற்கையிலிருக்கும் தாதுமணலிலிருந்து நேரடியாக அவற்றைப் பிரித்தெடுக்கலாம். தாதுமணலிலிருந்து பிரித்தெடுப்பதில் தனித்துவமாக எதுவுமில்லை. அறிவியலும் அதற்குப் பெரிதாகத் தேவையில்லை. ஆனால், இரும்பை அப்படி நேரடியாகப் பிரித்தெடுத்துப் பெற்றுக்கொள்ள முடியாது. இயற்கைத் தாதுமணலில் தூய இரும்பு நேரடியாகக் கலந்திருப்பதில்லை. தூய்மையான இரும்பு (Fe), மிகச்சுலபமாக உயிர்வளியுடன் (Oxygen) வினைபுரிந்து, ‘இரும்பு ஆக்சைட்’ (Ferric oxide) ஆகிவிடும். அதனால், மனிதன் பெற்றுக்கொள்ளும் வகையில், தூய இரும்பு, இயற்கையில் இருக்காது. இரும்பு ஆக்சைட் மட்டுமே இயற்கைத் தாது மணலில் (Iron Ore) கலந்திருக்கும்.
மூன்று வகையில் இரும்பு ஆக்சைட் இருக்கின்றன. முதலாவது, ‘FeO’. இது மிகவும் அரிதானது. திடமற்றது. இரண்டாவது, ‘Fe2O3‘. இது ‘ஹெமடைட்’ (Hematite) என்னும் இரும்புத் தாதுவாக இயற்கையில் காணப்படுகிறது. மூன்றாவது, ‘Fe3O4’. இது, ‘மக்னடைட்’ (Magnetite) என்னும் இன்னொருவகை இயற்கையில் கிடைக்கும் இரும்புத் தாது.
இந்த மூன்று வகைகளில், முதல் வகை இரும்பு ஆக்சைட் (FeO), இயற்கையில் நிலையாக இருப்பதில்லை. இதுவும் உயிர்வளியுடன் (O2) சுலபமாக வினைபுரிந்து, ‘Fe2O3’ என்னும் அடுத்தவகை இரும்பு ஆக்சைட்டாக மாறிவிடுகிறது. அதனால், முதல் வகை மிகவும் அரிதானது. ஆனால், மற்ற இரண்டு ஆக்சைட்டுகளும், தாதுமணலாகத் தாராளமாகவே கிடைக்கின்றன. சிவப்பு, பழுப்பு, கருப்புச் சேர்ந்த மண்போன்று அவை காணப்படும். உலோக இரும்பின் எந்தச் சாயலையும் அதில் காணமுடியாது. ஹெமடைட், மக்னடைட் ஆகிய இரண்டு தாதுக்களிலிருந்துதான் தூய இரும்பு பெற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனாலும், ஏனைய உலோகங்கள்போல, அதைச் சுலபமாகப் பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு, அறிவியலின் பெருந்துணை இருக்க வேண்டும். சொல்லப் போனால், 5000 ஆண்டுகளுக்கு முன்னர், அப்படியான ஒன்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. முடியாததை நம் மூத்த தமிழர்கள் முடித்துக் காட்டியிருக்கிறார்கள்.
மீண்டும் சொல்கிறேன், தமிழ் தமிழ் என்று சற்று மிகைப்படுத்தலுடன் இவற்றைச் சொல்கிறேன் என்று நினைத்துவிட வேண்டாம். நீங்கள் அப்படி நினைக்கலாம் என்பதற்காக, ஆதித் தமிழரின் அறிவியல் சாதனைகளை மேம்போக்காகச் சொல்லிவிட்டும் என்னால் நகர முடியாது. இரும்பைப் பெற்றுக் கொள்வதில், எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில், அதைக் கையகப்படுத்தியதும், அதன்மூலம் கருவிகளை உருவாக்கியதும் எவ்வளவு பெரிய விசயம் என்பதைத் தொடர்ந்து படிக்கும்போது, நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
சாதாரண மண்ணைவிட நிறத்திலும், எடையிலும் இரும்புத்தாது மண் (Iron Ore) வேறுபட்டிருக்கும். அதை, ஆதித் தமிழர்கள் ஏதோ வகையில் தற்செயலாகவோ, தனித்துவமாகவோ தெரிந்திருந்தார்கள். அந்த மண்ணை வெப்பமாக்குவதால், அதிலிருந்து தனியாக ஒரு உலோகம் பிரிந்துவருவதை எப்படியோ அறிந்து கொண்டார்கள். அதுகூடப் பெரிய விசயமில்லை. காட்டுத் தீயில் அல்லது வேறு வகையில், குறிப்பிட்ட வகை மண் அகப்பட்டு, அதிலிருந்து ஒரு உலோகம் பிரிந்து வந்ததை தற்செயலாக அவர்கள் அவதானித்திருக்கலாம். தமிழர்களின் அறிவில் அதுவரை எந்தச் சிறப்பும் இல்லை. தற்செயலாக நடந்த அச்செயலிலிருந்து கிடைத்த உலோகத்தை, நான் செதற்கையாகப் பெறவேண்டும் என்று நினைத்து, அதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கியதில்தான் அவர்களின் சிறப்பு வெளிப்பட்டது.
தாது மணலை வெப்பமாக்கினால், இரும்பைப் பிரித்துப் பெறலாம் என்று தெரிந்ததும், மரங்களை அடுக்கி, அதன்மேல் அம்மணலைக் கொட்டிச் சூடாக்கினார்கள். மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்த்தார்கள். ம்ஹூம்…! எந்த உலோகமும் அதிலிருந்து பிரிந்து வரவில்லை.
“என்ன தவறு செய்கிறோம்?”
அதற்கு மிகவும் அதிகமான வெப்பம் தேவை என்பது மெல்லப் புரிந்தது. பெருமளவான மரங்களை அடுக்கி, அதிக நெருப்பை உருவாக்கி மணலைச் சூடாக்கினார்கள். வெப்பநிலை அதிகரித்தது. அப்போதும் எதுவும் நடக்கவில்லை. தேமே என்றிருந்தது மண்.
“இதைவிட மேலதிகமாக வெப்பமாக்க வேண்டுமோ?”. சிந்தித்தார்கள்.
தாது மணலிலிருந்து இரும்பு பிரிவதற்கு எவ்வளவு வெப்பம் தேவை தெரியுமா? கிட்டத்தட்ட 1200 சதம பாகை (1200°C) வெப்பம் தேவைப்படும். அதற்கு அவர்கள் எங்கே போவார்கள்? வெளியான இடத்தில், எத்தனை மரங்களை அடுக்கி எரித்தாலும் அத்தனை வெப்பநிலையை அடைய முடியவில்லை. காற்று வெளிகளில் வெப்ப இழப்பு, அதிகமாக இருக்கும். மூடப்பட்ட வடிவமைப்பில் எரிப்பதால் மட்டுமே அவ்வுயர் வெப்பநிலையை அடையலாம். மனித வரலாற்றிலேயே முதல்முறையாகக் இரும்பிற்கான காற்று அனல் உலை ((Bloomery Furnace) தமிழர்களால் உருவாக்கப்பட்டது.
இரும்பைப் பிரித்தெடுப்பதற்காகவே மனிதன் முதன்முதலாக அனல் உலைகளை உருவாக்கினான் என்னும் வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஆபிரிக்க நாடான பழைய சூடான் (Nubia)) நாட்டில், கி.மு.700 களில் களிமண்ணினால் உருவாக்கப்பட்ட அனல் உலைகள் (Bloomery Furnaces) பயன்படுத்தியிருக்கும் பதிவுகள் இருக்கின்றன. அனல் உலைகள் அங்குதான் முதன்முதலாக உருவாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடிக்கும்போது அதை உருவாக்கியிருக்கிறார்கள்.
“உலையைப் பயன்படுத்துவதெல்லாம் ஒரு விசயமா என்ன?”
அப்படிக் கேட்டுவிட்டுச் சென்றுவிட முடியாது. இது நடந்தது இன்றோ, நேற்றோ அல்ல. எந்த வசதியும், அறிவியலும் இல்லாத 5000 ஆண்டுகளுக்கு முன்னரான காலத்தில், நினைத்தே பார்க்க முடியாத அறிவியல் கண்டுபிடிப்பு அவை. காற்றை ஊதி ஊதி நெருப்பை விரிவாக்கும் பொறிமுறையுடனான இரும்பைப்பெறும் அனல் உலையைத் தமிழர்களே முதலில் உருவாக்கியிருக்க வேண்டும். சூளைகள் (kilns), ஆதிமனிதனால் பயன்படுற்றப்பட்டிருக்கலாம். ஆனால் இரும்பைக் கண்டுபிடிக்கும் நோக்கம், அனல் உலையின் பாதையில் அவர்களை நகர்த்தியிருக்கிறது.
அனல் உலையும் உருவாக்கப்பட்டது. வெப்பநிலையும் படிப்படியாக உயர்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில், கடற்பாசி போன்று மென்மையான உலோகம், தாதுமணலிலிருந்து தனியாகப் பிரிந்து வந்தது. இரும்பைப் பிரித்தெடுப்பதில் தமிழர்கள் வெற்றி கண்டார்கள். கிடைத்த தூய இரும்பை வைத்து என்ன செய்வது? திகைத்துப் போய் நின்றான். தட்டையான, ஒழுங்கற்ற, மென்மையான அந்த உலோகத்தைக் கற்களால் அடித்தும், நெளித்தும் ஒருசில அணிகளைச் செய்யலாம். விரும்பிய வடிவத்தில், விரும்பிய அளவுகளில் அதைக்கொண்டு எதையுமே உருவாக்க முடியவில்லை. என்ன செய்வது?
தூய இரும்பு மிகவும் மென்மையானது. அதைக்கொண்டு உபகரணங்களோ, கருவிகளோ, ஆயுதங்களோ செய்ய முடியாது. இரும்பைக் கடினமாக்கினால் மட்டுமே அவற்றை உருவாக்கலாம். அதைக் கடினமாக்குவதற்கு, முதலில் அதை உருக்க வேண்டும் (அதனாலேயே, இரும்புக்கு ‘உருக்கு’ என்னும் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது). உருக்கிய பின், எஃகு (Steel) ஆக மாற்ற வேண்டும். இரும்பின் கடினமான வடிவமே ‘எஃகு’ எனப்படுகிறது. அதன் கடினம், தரம், துருப்பிடிக்காத தன்மையைப் பொறுத்துப் பல விதங்களில் எஃகுக்கள் இருக்கின்றன. நவீன கால மேம்படுத்தப்பட்ட எஃகுதான் Stainless Steel. இரும்பை எஃகு ஆக்குவதற்கு அதனுடன் கார்பன் (C) கலக்கப்படும். 0.002% இலிருந்து 2% வரையான கார்பன் இதில் கலக்கப்படுகிறது. அதற்குமேல் கலந்தால் இரும்பை அது தரமற்றதாக்கிவிடும். இந்தக் கலவைக்கேற்ப அதன் தரமும், வலிமையும் மாறுபடும்.
ஆதிச்சநல்லூரில் தமிழர்கள் உருவாக்கிய இரும்பில் 1% இலிருந்து 2% வரையான கார்பன் கலக்கப்பட்டிருக்கிறது. அவை ‘வூட்ஷ் எஃகு’ (Wootz Steel) வகையானவை. இன்று ‘டமாஸ்கஸ் வாள்கள்’ என்று சொல்லப்படும் கடினமான தரமான கத்திகள்கூட, வூட்ஷ் எஃகுவில்தான் உருவாக்கப்படுகின்றன. வூட்ஸ் எஃகு முதன்முதலில் கி.மு.300 ஆண்டுகளில் இந்தியாவிலும், இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டதற்கான, சான்றுகள் ஏற்கனவே உள்ளன. இப்போது ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டவை, மேலும் அதிக காலத்திற்கு முன் கொண்டு சென்றிருக்கிறது.
எல்லாமே சரிதான். இரும்பை உருக்குவதோ, அதில் கார்பன் கலப்பதோ சாதாரண செயல்முறையே கிடையாது. இன்றிருப்பதுபோல், நவீனக் கலப்புலோகத் தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும், அறிவியல் மேன்மை இருந்தால் மட்டுமே அவற்றைச் செய்ய முடியும். இரும்பைத் தாது மணலிலிருந்து பிரித்தெடுத்த தமிழர்கள், மேலும் மேலும் வெப்பநிலையை அதிகரித்து, உருக்காக மாற்றிக் கொண்டார்கள். அதற்குக் கிட்டத்தட்ட 1538°C அளவு வெப்பநிலை வேண்டும். அந்த வெப்பநிலையையும் அனல் உலைகள்மூலம் அடைந்தார்கள். அதன் முடிவு, கத்தி, வாள், அணிகள் எனப் பல இரும்புக் கருவிகள் உருவாக்கப்பட்டன. சமீபத்தில், தமிழகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கருவிகளைப் பார்த்து, அறிவியல் உலகமே வியந்து போயிருக்கிறது. தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் நடைபெறாத நிலையில், அடுத்தடுத்த ஆராய்ச்சிகளில் மேலும் என்னவிதமான இரும்புக் பொருட்கள் வெளிவருமோ என்று காத்திருக்கிறார்கள். அவை கிடைத்தால், தமிழர்களின் அறிவியல் வளர்ச்சி, யாருமே தொட்டுவிட முடியாத உயரத்தை அடையும். வரலாறு புதிதாகத் திருத்தி எழுதப்படும். அதைப் பலர் விரும்பவில்லை. அதனால், அகழ்வாராய்ச்சிகளின் அடுத்த கட்ட நகர்வுகள் தடுக்கப்படுகின்றன. தாமதப்படுத்தப்படுகின்றன. காரணம் பயம்.
இரும்பின் ‘உருகுநிலை’ (Melting point) 1538°C. அந்த வெப்பநிலைக்குச் சூடேற்றினால் மட்டுமே இரும்பு உருக ஆரம்பிக்கும். உருகிய இரும்புடன் மரங்களின் கரியைச் சேர்த்து எஃகுவாக மாற்றியிருக்கிறார்கள். அந்தளவு வெப்பநிலையைப் பெறுவதற்கான, எந்த உபகரணமும் ஆதி மனிதர்களிடம் இருந்திருக்கச் சாத்தியமே இல்லை. ஆனாலும், நம் தமிழ் மூதாதையர்கள் அதைச் செய்திருக்கிறார்கள் என்பது பலரைப் பயமுறுத்துகிறது.
இன்று அறிவியல் எங்கோ போய்விட்டது. யாரும், எதையும் சாதிக்க முடியும் என்றாகிவிட்டது. ஒரு மூலையில் அமர்ந்தபடியே, உலகத்தைப் புரட்டிப்போடும் சாதனைகளைத் தனிமனிதனாலேயே செய்ய முடியும். அதனால், 5500 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட மிகப்பெரிய அறிவியல் சாதனை, தமிழர்களான நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை. எதையும் கண்டுகொள்ளாமல் விலகிச் செல்கிறோம்.
1200°C என்னும் அதியுயர் வெப்பநிலையை, மேலும் அதிகமாக்கி, 1538°C க்கு உயர்த்த வேண்டுமென்றால், காற்றை ஊதி நெருப்பைப் பெரிதாக்க வேண்டும். காற்றூதியின் அளவையும் பெரிதாக்க வேண்டும். உயர் வெப்பநிலையைத் தாங்கும் உலையமைப்பும் வேண்டும். எல்லாமே கணிக்கப்பட்டுச் செய்திருந்தால் மட்டுமே இரும்பை உருக்க முடியும். கருவிகளை உருவாக்க முடியும். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கருவிகள் இவை அனைத்துக்கும் முன்னுதாரணம். புராணங்களிலும், இதிகாசங்களிலும் சொல்லப்பட்ட ஆயுதங்களோ, கருவிகளோ அல்ல அவை. ஊனும் உயிருமாய்த் தமிழர்கள் உருகி உருகிச் செய்த உண்மைக் கருவிகள். கண்முன்னே காட்சிதரும் மாறாச் சாட்சிகள்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ‘ஆதிச்சநல்லூர்’ மற்றும் ‘சிவகளை’ ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த இரும்புப் பொருட்களும், ஏனைய பொருட்களும், கி.மு.3345 அதாவது, கிட்டத்தட்ட 5350 ஆண்டுகளுக்கு முன்வரை பழமையானவை என அறிவியல் ரீதியான காலக்கணிப்பு முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புனேயில் உள்ள ‘பீர்பால் சகானி தொல்லாராய்ச்சி அறிவியல் நிறுவனம்’, ‘அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்’, ‘அமெரிக்கா பீட்டா ஆய்வகம்’ ஆகியவற்றில் அவை முறையாகப் பரிசோதிக்கப்பட்டன. ஏற்கனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறையில், 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், இரும்புப் பொருட்களுடன் கிடைத்த ஏனைய பொருட்களை, AMS (Accelerator Mass Spectrometry) முறையில் ஆய்வு செய்தபோது, கி.மு.2172 அதாவது, 4200 ஆண்டுகள் பழமையானவையெனக் கணிக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் கிடைத்த பண்பாட்டு எச்சங்கள், காலத்தில் அதைவிடப் பழமையானவையாக இருக்கலாம் என்னும் முடிவுக்கும் கொண்டுவந்திருக்கிறது. இந்த ஆய்வுகளில் கிடைத்த கருப்பு, செந்நிற மட்பாண்டங்கள், முன்னைய இரும்புக் காலத்துடன் தொடர்புடையவை எனவும் கருதப்படுகிறது.
தமிழர்கள், இரும்பைக் கண்டுபிடித்த அதே சமகாலங்களில், எகிப்து நாகரீக மக்களிடமும் இரும்பினால் செய்த சிறிய பொருட்கள் பாவனையில் இருந்திருக்கின்றன. சிறிய மணிகள், தலைவனுக்கான சிறு கத்தி போன்றவை இரும்பினால் செய்யப்பட்டிருந்ததும் தெரிந்தது. ஆனாலும், தமிழனின் இரும்புப் பயன்பாடுதான் முதன்மையானது என்ற முடிவுக்கே அகழ்வாராய்சி அறிஞர்கள் வந்திருக்கிறார்கள். காரணம், எகிப்தியர்கள் இரும்பைக் கண்டுபிடிக்கவில்லை. மாறாகக் கண்டெடுத்தார்கள். தமிழர்களோ, இரும்பைக் கணபிடித்திருக்கிறார்கள். “கண்டெடுத்தார்களா? இதென்ன புதுக் கதை?” என்னும் வியப்பு உங்களுக்குத் தோன்றலாம்.
விண்வெளியிலிருந்து புவிக்குள் நுழையும் சிறியளவான விண்கற்கள் (meteorite), பெரும்பாலும் இரும்பும், நிக்கலும் கலந்து, ஒரு கலவை உலோகமாக இருக்கும். இதை siderite என்பார்கள். இந்த இரும்பைக் (Meteoritic iron) கண்டெடுத்த மனிதர்கள், அதிலிருந்து மணிகளையும், சிறு கத்திகளையும் உருவாக்கித் தங்கள் தலைவனுக்குப் பரிசளித்திருக்கிறார்கள். அது கண்டுபிடிக்கப்பட்ட தனி இரும்பு அல்ல. கண்டெடுக்கப்பட்ட இரும்பு. பூமியின் மையக் கோளும் (Earth‘s Core), இரும்பும், நிக்கலும் சேர்ந்த கலவையால் உருவானதுதான்.
தூய இரும்பை, இன்று வரையான வரலாற்றுச் சாட்சியங்களின்படி, தமிழரே முதன்முதலில் கண்டுபிடித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அத்துடன், 3200 ஆண்டுகளில் ஆரம்பித்ததாகச் சொல்லப்படும், ‘இரும்புக் காலம்’ (Iron Age), 6000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதித் தமிழர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.