Thursday, 30 May 2019

பணக்கார கோவில்

#பணக்காரக்கோவில்..

2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பணக்கார கோவிலாகத் திகழ்ந்தது தற்போது பாகிஸ்தானின் மூலஸ்தானம் என்னும் இடத்தில் இருந்த #சூரியனார்_கோவில் ஆகும். இப்போது இந்த நகரை மூல்டான் என்று அழைக்கின்றனர். 

இங்கு காந்த சக்தியால் அந்தரத்தில் தொங்கிய அதிசய சூரியன் விக்கிரகம் அலெக்ஸாண்டரை அசரவைத்தது என்று கிரேக்க, மற்றும் அராபிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். 

மூல்டான் பற்றி தொல்பழங்காலக் குறிப்புகளும் கிடைக்கின்றன.

கிரேக்க நாட்டு ராணுவ தளபதியான் ஸ்கைலாக்சும் இது பற்றி எழுதியிருக்கிறார். 

அவர் முதலாம் டேரியஸ் மன்னன் (கி.மு.550 – 486) காலத்தில் பஞ்சாபுக்கு வந்தார். 

காஸ்யபபுரம் பற்றி ஹெரோடோட்டஸ், டாலமி ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர் என அறியப்படுகிறது. 

மூல்டான் கோவிலுக்கு வந்த அலெக்ஸாண்டர் அங்குள்ள கலைக்கோவிலைக் கண்டு அசந்தே போய்விட்டார். அந்தக் கோவில் விக்ரகம் பல காந்தக் கற்களின் உதவியால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். 

மூலஸ்தான் சூரியதேவனார் கோவில் பற்றி 1200 ஆண்டுகளுக்கு முன் சீன யாத்ரீகர் #யுவான்சுவாங்கும் சூரியனார் சிலை சொக்கத் தங்கத்தினால் ஆனதெனவும், ஏராளமான ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

மூல்டானில் வேறு இரண்டு கற்சிலைகளும் இருந்தனவெனவும் அவற்றின் பெயர் ஜுன்புகாத், சூன்புகாத் (துவார பாலகர்கள்??) பள்ளத்தாக்கின் இரண்டு பக்கமும் 80 கஜ இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன எனவும். இந்த சிலைகளை வெகு தொலைவிலிருந்தே காண முடியும் ஏனவே.பக்தர்கள் மரியாதை காரணமாக  வண்டியில் இருந்து இறங்கி வெறும் கால்களால் நடந்து கோவிலுக்கு வருவர் எனவும் கூறப்படுகிறது..

இது பற்றி சிந்து ராஜ்ய வரலாறு என்னும் புத்தகத்தில் #டாக்டர்_மும்தாஜ் என்ற பாகிஸ்தானிய எழுத்தாள பெண்மணி எழுதியுள்ளார்..

(கிருஷ்ண பகவானால் சபிக்கப்பட்ட அவரின் மகன் சாம்பன், தொழு நோயிலிருந்து மீள, சந்திரபாகா நதிக்கரையில் சூரியபகவானுக்கு ஒரு கோயில் கட்டி பிரியமாக வணங்கினார். அதுவே சூரியனுக்கு உரிய முதல் கோயில் என புராணங்கள் கூறுகின்றன).


#ப்யாரீப்ரியன்..

இணையத்திலிருந்து..

Saturday, 18 May 2019

ஐ எழுத்தின் சிறப்பு

#ஐ...

தமிழ் எழுத்துகளிலேயே தனக்கென ஒரு கம்பீரத்தை உடைய எழுத்து ”ஐ”

எழுத்தைப் பாருங்கள். ஒரு தமிழ் அரசன் தன்னைப் பணிந்த பகைவன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அழகை தன்னிடத்திலே கொண்டு விளங்கும்.

சொற்களோடு ”ஐ” சேர்த்து உச்சரிக்கும் போது, வசதியும் இனிமையும் கூடுகிறது.

”மாணிக்கக் கூத்தனை, வண்தில்லைக் கூத்தனை”-                                                   திருமூலர்.

”ஐ” என்கிற ஓரெழுத்தேகூடக் கடவுளைக் குறிக்கிறது. 
அது அகரம்-இகரம்-யகரம் என்ற மூன்றையும் சேர்ந்தது.

அகரம்-கடவுள்,பதி - இகரம்-ஆத்மா-பசு  -  யகரம்-உலகம், பாசம் என வாரியார் சுவாமிகள் விளக்குகிறார்.

தமிழகத்தின் பழைய இயற்கைப் பிரிவுகளை ”ஐந்திணை” என்றழைததனர். அவையாவன: குறிஞ்சி(மலை), முல்லை(காடு), மருதம்(வயல்), நெய்தல்(கடல்), பாலை.

”ஐ” என்றாலே தலைவன், காதலன் என்றொரு பொருள் உண்டு.

வேப்ப மரம் பூக்கும்பொழுது திரும்பிவிடுவதாகக் கூறிப் பிரிந்து சென்ற தலைவன் அவ்வாறு வரவில்லை.புதிதாகப் பூத்த வேப்பம்பூ தலைவன் இன்றி வீணாகிறதே எனத் தவைவி வருந்துகிறாள்..இங்கு தன் காதலனை ”ஐ” என்று குறிப்பிடுகிறாள்.

”கருங்கால் வேம்பின் ஒன்பூ யாணர்

என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ”

                                             (குறுந்தொகை)

ஐ என்றால அழகு என்றொரு பொருளுண்டு. அழகியது என்பதனை முன்னாளி்ல் ஐது என்பர். அழகாக மழை பெய்கிறது என்பதை ”ஐது வீழி பெயல்” எனச் சிறுபாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.

ஐ என்பதை தமிழில் மிக உயர்ந்த பெரியோர்களைம், மன்னர்களையும், சான்றோர்களையும் விளிக்க அதனுடன் யா இணைந்து ”ஐயா” என்கிற வழக்கு தமிழ் இலக்கியங்களிலும் நடைமுறையிலும் பயிலப்படுகிறது.

ஒருமுறை பாரத சொற்பொழிவாளர் ஒருவர் பேசும் பொழுது குறிப்பிட்ட செய்தியானது, ”தமிழ் மொழியில் மிக உயர்வான ஒரு சொல் ”ஐயா” என்பதாகும் என்றம், அந்தச் சொல் பயின்றுவரும் கவிதையில், அதனால் விளிக்கப்படுகிறர் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பிரியமாக போற்றப்படுவர்” என்பதாகும்.

”ஐ” என்றாலே வியப்பின் அடையாளமாகும்.

”ஐ” என்ற ஓரெழுத்து ஏராளமான அழகிய பொருட்களைத்தருவது நிச்சயமாக நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
#ப்யாரீப்ரியன்...

Friday, 3 May 2019

குழலூதும் சிவன்

குழலூதும் சிவபெருமான்

வலப்புறம் உமை இடப்புறம் நந்திதேவருடன் பின்னிரு கரங்களில் மானும் மழுவுமேந்தி குழலிசைக்கும் சிவனாக.....
................
இராஜகம்பீர மண்டபத்து தூண் சிற்பம்/
இராசராசேச்சரம் எனும் ஐராவதீசுவரர் திருக்கோயில்/ தாராசுரம்

Thursday, 2 May 2019

உடுக்கை கயிறு



பெரும்பாறையை குடைந்து,
கையளவில் சிற்பத்தை செதுக்கி,

அச்சிறு சிற்பத்தின் கையில் உடுக்கையை வைத்து,
அந்த உடுக்கையின் கயிறையும் நேர்த்தியாக வடித்திருப்பதை....
எண்ணி.....
வியந்து தான் போனேன்....
அத்தனையும் ஆறு அங்குல பரப்பில்....
#ப்யாரீப்ரியன்..